ECONOMYNATIONAL

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்திற்கு பெக்காவானிஸ் வெ.200,000 ஒதுக்கீடு 

ஷா ஆலம், மார்ச் 9- மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 120 மாணவர்களுக்கு பள்ளி சீருடை மற்றும் உபகரணங்களை பெக்காவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல அமைப்பு வழங்கியுள்ளது.

தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார் படுத்துவதில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

ஒவ்வொரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதியிலும் 20 மாணவர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக பெக்காவானிஸ் தலா 3,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தை அமல்படுத்த 35 சட்டமன்றத் தொகுதிகள் இணக்கம் தெரிவித்துள்ள வேளையில் இன்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற நிகழ்வில் சுங்கை துவா, பத்தாங் காலி, லெம்பா ஜெயா, தாமான் மேடான் ஆகிய தொகுதிகள் பங்கு கொண்டன என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள ராஜா துன் ஊடா நூலகத்தில் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்களை மேற்கொள்வதற்காக 35 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 105,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கிலான தொடக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதி ஒதுக்கீடு அமைகிறது. தன்முனைப்பு மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, தேர்வுத் தாள்களுக்கு விடையளிப்பதற்கான நுட்ப பயிற்சி மற்றும் மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காண்பதற்கு உதவக் கூடிய இதரத் திட்டங்களுக்கு எஞ்சியத் தொகை செலவிடப்படும் என்றார் அவர்.


Pengarang :