ECONOMYPBT

கிள்ளானில் சாலைகள், வடிகால்களைத் தரம் உயர்த்த வெ.40 லட்சம் ஒதுக்கீடு- நாடாமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 9- கிள்ளான் வட்டாரத்தில் 42 சாலை சீரமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 23 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வட்டாரத்தில் 21 வடிகால்களை  தரம் உயர்த்தும் திட்டங்களை மேற்கொள்வதற்காக அந்த நகராண்மைக் கழகத்திற்கு மேலும் 17 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

கிள்ளான் இன்னும் நகராண்மைக் கழக அந்தஸ்தைக் கொண்டுள்ளது. சீரான சாலைகள் மற்றும் கால்வாய் வசதிகளை முறையாகப் பராமரிப்பதன் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் நகரில் சாலைகள் மற்றும் வடிகால்களைத் தரம் உயர்த்துவதற்கு புதிதாக செய்யப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் அமைச்சுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று 2023ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

முன்னதாக, அவை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், கிள்ளான் மாநகர் அந்தஸ்தைப் பெற்றுவிட்ட போதிலும் அதன் வளர்ச்சிக்கேற்ப அப்பகுதியின் தரம் குறிப்பாக சாலை வசதிகள் அமையவில்லை என்று கூறியிருந்தார்.


Pengarang :