ACTIVITIES AND ADSECONOMY

நோன்பு மாதத்திற்கு முன்னர் ஐந்து இடங்களில் மலிவு விற்பனை- உலு கிளாங் தொகுதி ஏற்பாடு

அம்பாங் ஜெயா, மார்ச் 10- நோன்பு மாதத்திற்கு முன்னர் ஐந்து முறை மலிவு விற்பனையை நடத்த உலு கிளாங் தொகுதி மக்கள் சேவை மையம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்ற பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் அவர்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக தொகுதி சேவை மையத்தின் நிர்வாகி ஹெல்மிஸான் அப்துல் கரீம் கூறினார்.

கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஒன்பது முறை இந்த மலிவு விற்பனையை இத்தொகுதியில் நடத்தியுள்ளோம். இம்மாதம் இதுவரை இரு முறை மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவும் நோக்கில் நோன்பு தொடங்குவதற்கு முன்னர் இம்மாதத்தில் மேலும் ஐந்து முறை இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த மலிவு விற்பனை தொடங்கப்பட்டது முதல் இதுவரை தொகுதியைச் சேர்ந்த 13,000 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தொகுதியில் இதுவரை 31 முறை மலிவு விற்பனையை நடத்தியுள்ளோம். இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வரும் வேளையில் ஒவ்வொரு முறையும் 300க்கும் மேற்பட்டோர் இந்த விற்பனையில் கலந்து கொள்கின்றனர் என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும்  பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :