MEDIA STATEMENTNATIONAL

இன்று ஷா ஆலமில் கெஅடிலான் சிறப்பு மாநாடு-மக்கள் நலன், மாநிலத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 18- கெஅடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாடு இன்று இங்கு நடைபெறுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இக்கட்சியை வழி நடத்தி வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமர் என்ற முறையில் கட்சி மாநாட்டிற்கு தலைமையேற்பது இதுவே முதன் முறையாகும்.

மெலாவத்தி அரங்கில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 5,000 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் தலைமையுரையாற்றும் டத்தோஸ்ரீ அன்வார் மக்கள் நலன், நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கான திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சித் தேசியத் தலைவரின் கொள்கையுரையுடன் தொடங்கும் இந்த மாநாட்டில் கெஅடிலான் கூட்டுறவுச் சங்க (கிரா) தொடக்கவிழா, பேராளர்களின் விவாதம் மற்றும் மாநாட்டை ஒத்தி வைக்கும் தீர்மானம் மீதான தலைவரின் உரை ஆகியவை இடம் பெறும்.

விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தல் மீதும் இந்த ஒரு நாள்  மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பக்கத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பின் வாயிலாக உருவாக்கம் கண்ட ஒற்றுமை அரசாங்கத்தின் தொகுதி பங்கீட்டின் ஆகக்கடைசி நிலவரங்கள்  உள்ளிட்ட விவகாரங்கள் இந்த மாநாட்டில் முன்னுரிமைப் பெறும்.

இம்மாநாட்டில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ரபிஸி ரம்லி, உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நுருள் இசா,  ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோரும் கலந்து கொள்வர்.


Pengarang :