ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வெள்ளத் தடுப்பு திட்டங்கள் மறுஆய்வு- அதே நிதியில் அதிகத் திட்டங்களை மேற்கொள்ள வாய்ப்பு 

ஷா ஆலம், மார்ச் 18- வெள்ளத்தைத் தடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட 1,500 கோடி வெள்ளியில் அமல் செய்யப்படவிருந்த திட்டங்களை மறுஆய்வு செய்ததன் விளைவாக அதே நிதியில் மேலும் அதிகமானத் திட்டங்களை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்த  திட்டங்களின் அளவு மற்றும் அதற்கான நிதியை கணக்கிட்டால் எட்டு அல்லது ஒன்பது வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மட்டும் தான் அமல் செய்ய முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

காழ்ப்புணர்வின் காரணமாகவோ பிறரின் குறை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவோ நான் இதனைக் கூறவில்லை. அரசாங்கப் பணத்தைக் காப்பாற்றி மக்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என விரும்புகிறேன். பிரதமர் என்ற முறையில் இது எனது பணியாகும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு வெள்ளத் தடுப்பு திட்டங்களை எடுத்துக் கொள்வோம். இதற்காக ஒதுக்கீடு 1,500 கோடி வெள்ளி என நாடாளுமன்றத்தில் நான் கூறியிருந்தேன். முந்தைய திட்டங்களின் அடிப்படையில் பார்த்தால் எட்டு அல்லது ஒன்பது திட்டங்களைத்தான் மேற்கொள்ள இயலும்.

நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட டெண்டர் முறையின் வழி இதனை மேற்கொண்ட போது இரண்டு அல்லது மூன்று திட்டங்களைக் கூடுதலாக மேற்கொள்ள முடிந்தது. ஜோகூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெள்ளத் தடுப்பு திட்டத்தை நான் இரண்டாக அதிகரித்துள்ளேன். அதே நிதி தான், ஆனால் அதை நாம் திறனுடனும் வெளிப்படை போக்குடனும் நிர்வகித்தோம். இதில் எந்த மோசடியும் நிகழவில்லை என்று அவர் சொன்னார்.

ஷா ஆலம், மெலாவத்தி அரங்கில் நேற்று நடைபெற்ற கெ அடிலான் கட்சியின் சிறப்பு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, அரசாங்கம் நாட்டு மக்களின் நலனை தொடர்ந்து காத்து வரும் என்றும் தவுக்கைகளும் பணக்கார நிறுவனங்களும் வரி செலுத்துவதிலிருந்து தப்புவதை ஒருபோதும் அனுமதிக்காது என்று நிதியமைச்சருமான அவர் உறுதிபடத் தெரிவித்தார்.


Pengarang :