ECONOMYMEDIA STATEMENT

வெ.3.7 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல்- 119 பேர் கைது- காவல்துறை தகவல்

கோலாலம்பூர், மார்ச் 24- வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் மோசடிக்கு எதிராக இவ்வாண்டு தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமை வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் 119 பேர் கைது செய்யப்பட்டதுடன் 3 கோடியே 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

அரச மலேசிய போலீஸ் படை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு மையத்தின்  மூலம் மேற்கொண்ட ஓப்ஸ் கொண்ட்ராபிரான் மற்றும் ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கை வாயிலாக  இந்த வெற்றி கிட்டியது என்று அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

அக்காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 45 சோதனை நடவடிக்கைகளின் போது 43 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1 கோடியே 90 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சிகரெட் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இச்சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக கடந்த ஜனவரி மாதம் 1 கோடி வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் பிப்ரவரியில் 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் மார்ச் 21ஆம் தேதி வரை 25 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இதே காலக்கட்டத்தில் 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட டீசல், பெட்ரோல், சமையல் எண்ணெய் மோசடிக்கு எதிரான ஓப்ஸ் திரிஸ் நடவடிக்கையில் 76 பேர் தடுத்து வைக்கப்பட்டதோடு 1 கோடியே 80 லட்சம்  வெள்ளி மதிப்புள்ள பொருட்களும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.


Pengarang :