ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலாய் வாக்காளர்கள் ஆதரவை ஹராப்பான் பெறும்- வட சிலாங்கூரை வெற்றி கொள்ள நம்பிக்கை 

கிள்ளான், மார்ச் 26- பதினைந்தாவது பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியும் என பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

அம்பாங் மற்றும் கோம்பாக் தொகுதிகளில் ஹராப்பான் கூட்டணி பெற்ற வெற்றியை உதாரணம் காட்டிய சிலாங்கூர் ஹராப்பான் தலைவர்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இதர தொகுதிகளிலும் மலாய் வாக்காளர்களின் வாக்குகள் அதிகமாக கிடைத்ததாகச் சொன்னார்.

பல தொகுதிகளில் அதிகமான எண்ணிக்கையில் மலாய்க்காரர்களின் வாக்குக்குகளைப் பெற்றோம். ஹராப்பான் மலாய் சமூகத்தின் வாக்குகளை அதிக அளவில் பதிவு செய்தது என்று அவர் தெரிவித்தார்.

மலாய் வாக்காளர்களின் ஆதரவு அதிகமாக இல்லாவிடில் கோம்பாக் மற்றும் அம்பாங்கில் நாம் வெற்றி பெற்றிருக்க மாட்டோம் என்று இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் ஜசெக பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மாநில நிலையிலான ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையிலான ஒத்துழைப்பின் வழி மாநிலத்தின் வட பகுதி தொகுதிகளான கோல குபு பாரு, பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் ஆகியவற்றில் வெற்றி பெற முடியும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் கோல குபு பாரு தொகுதியில் நாம் அதிக எண்ணிக்கை வாக்குகளில் வெற்றி பெற்றோம். ஆனால், பத்தாங் காலி மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில் வாக்கு பெரும்பான்மை குறைவாகவே இருந்தது. ஒற்றுமை அரசாங்கத்தின் உருவாக்கத்தின் வழி இந்நிலை சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசின் ஐந்தாண்டு தவணைக் காலம் வரும் ஜூன் 25ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. முன்கூட்டியே சட்டமன்றம் கலைக்கப் படாத பட்சத்தில் வரும் ஜூலை மாதம் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கு வாயப்பு உள்ளது


Pengarang :