ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“சித்தம்“ திறன் வளர்ப்பு பயிற்சிகளை நடத்துவதற்கான மானியம் 5,000 வெள்ளியாக அதிகரிப்பு 

ஷா ஆலம், மார்ச் 31– வசதி குறைந்தவர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு துறைகளில் அடிப்படை பயிற்சிகளை வழங்கும் திட்டதை மேற்கொள்ள இந்திய சமூகத்  தலைவர்களுக்கு வழங்கப்படும் மானியம் 3,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப் பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சிப் பெறுவோருக்கு அவர்கள் பயிற்சிப் பெற்ற தொழிலுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கும் நோக்கில் இந்த மானியம் உயர்த்தப் படுவதாக “சித்தம்“ எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் கூறினார்.

தையல், சமையல்,ஒப்பனை,கைவினைப் பொருள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் வழங்கப்படும் ஒரு நாள் பயிற்சியில் பங்கு பெறும் மகளிருக்கு முன்பு சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சான்றிதழோடு அத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்களும் இனி வழங்கப்படும் என அவர் சொன்னார்.

உருமாற்றம் கண்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சித்தம் திட்டங்கள் குறித்து இன்று இங்கு இந்திய சமூகத் தலைவர்களுக்கு விளக்கமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முப்பது  முதல் 50 பங்கேற்பாளர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் இரு  பயிற்சிகளை தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு நடத்த இந்திய சமூகத் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இப்பயிற்சித் திட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர், தனித்து வாழும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த பயிற்சிகளின் மூலம் குறிப்பிட்ட தொழில்களில் ஓரளவு தேர்ச்சியும் அதற்கு தேவையான உபகரணங்களையும் பெறுவதன் மூலம் அவர்கள் உபரி வருமானத்தைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :