ECONOMYMEDIA STATEMENT

நிதி நெருக்கடியால் பண மீட்பு நிராகரிக்கப்படுகிறதா? இ.பி.எஃப். மறுப்பு

கோலாலம்பூர், ஏப் 12- தாங்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கூறப்படும் தகவல்களை ஊழியர் சேம நிதி வாரியம் (இ.பி.எஃப்.) மறுத்துள்ளது. ஓய்வு பெறுவோர் தங்கள்  சேமிப்புப் பணத்தை மீட்பதைத் தடுப்பதற்காக 1991ஆம் ஆண்டு ஊழியர் சேம நிதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதாக கூறப்படுவதையும் அந்த நிதி வாரியம் நிராகரித்துள்ளது.

அனைத்து கடப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக போதுமான அளவு ரொக்க கையிருப்பு புழக்கத்தில் இருப்பதை தாங்கள் உறுதி செய்து வருவதாக இ.பி.எஃப்.  அறிக்கை ஒன்றில் கூறியது.

வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி விற்கும் நடவடிக்கையானது அந்த சொத்துக்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து மேற்கொள்ளப்படும் முதலீட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். பணி ஓய்வு பெறுவோர் மீட்கும் பணத்தை ஈடுகட்டும் நோக்கில் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதில்லை என்று அது தெரிவித்தது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் இருந்த போதிலும் அண்மைய சில ஆண்டுகளாக இ.பி.எஃப்.பின் ஒட்டுமொத்த முதலீடு நிலையான வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது என அவ்வாரியம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

கடந்த 2023 ஏப்ரல 7ஆம் தேதியிடப்பட்ட வெளிநாட்டு ஊடகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக வெளியிடப்படும் ஆருடங்கள் தொடர்பில் அந்த நிதி வாரியம் இவ்வாறு விளக்கியது.


Pengarang :