ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இம்மாதம் 20ஆம் தேதி காலை 11.00 மணிக்கு பகுதி சூரிய கிரகணம்

கோலாலம்பூர், ஏப் 12- இம்மாதம் 20ஆம் தேதி மலேசியாவில் பகுதி சூரிய
கிரகணம் ஏற்படும். ஆஸ்திரேலிய கண்டத்தின் வடக்கே ஏற்படக்கூடிய
கலப்பு சூரிய கிரகணத்தையொட்டி இந்த நிகழ்வு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணத்தை சபா மக்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல்
2.00 மணி வரை காணலாம் என்றும் தீபகற்ப மலேசியாவில் காலை 11.00
மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நீடிக்கும் என்றும் அறிவியல்,
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சு தெரிவித்தது.
தீபகற்ப மலேசியாவைப் பொறுத்த வரை இந்த சூரிய கிரகணத்தின் போது
சூரியனின் மேற்பரப்பு ஒன்று முதல் 15 விழுக்காடு வரை தென்படும்.
சரவா மாநிலத்தின் கூச்சிங்கில் 30 விழுக்காடு வரையிலும் கோத்தா
கினபாலுவில் 34 விழுக்காடும் தாவாவில் 43 விழுக்காடும் தென்படும் என
அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பகுதி சூரிய கிரகணத்தைப் காணும் நிகழ்வு கோலாலம்பூர் மற்றும்
தாவாவில் உள்ள தேசிய கோளகத்திலும் நடைபெறும். வருகையாளர்கள்
இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக காண்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு
சூரிய கிரகணக் கண்ணாடிகள் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
அந்த சூரிய கிரகணத்தை நேரில் நேரடியாக பார்க்காமல் உரிய பாதுகாப்பு
கண்ணாடிகளை அணிந்து பார்க்கும்படியும் பொது மக்களை அது கேட்டுக்
கொண்டது. நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்கும் பட்சத்தில்
விழிப்படத்தில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும் அபாயம்
உள்ளதாகவும் அது கூறியது.

Pengarang :