ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஐந்து ஆலயங்களுக்கு தனது சம்பளப் பணத்தை பகிர்ந்தளித்தார் டத்தோ ரமணன் 

சுங்கை பூலோ, ஏப்.15-  புதிதாக பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், தொகுதியிலுள்ள 5 இந்துக் கோயில்களுக்கு தமது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை பகிர்ந்தளித்தார்.

நேற்று காலை இங்கு ஆர்.ஆர்.ஐ.எம்  ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பூசையில் கலந்து கொண்ட அவர், ஆலயத் தலைவர் இராஜேந்திரனிடம் ஐயாயிரம் வெள்ளிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, கம்போங் பாரு சுங்கை பூலோவிலுள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஐயாயிரம் வெள்ளி, கம்போங் ஸ்ரீ பூங்காவிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி, ஜாலான் கம்போங் பாடாங் தேம்பாக்கிலுள்ள ஸ்ரீ சிவ சக்தி ஆலயத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி, தாமான் செகாரிலுள்ள ஓம் ஸ்ரீ ஜெய் மதுரை வீரன் மஹா காளியம்மன் சக்தி ஆலயத்திற்கு இரண்டாயிரம் வெள்ளி என மொத்தம் 5 இந்துக் கோயில்களுக்கு தமது சம்பளப் பணத்தை வழங்கி, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் டத்தோ ரமணன்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் டத்தோ மூர்த்தி தலைமையிலான பண்டார் பாரு சுங்கை பூலோவிலுள்ள தேவி ஸ்ரீ ராஜ மாரியம்மன் ஆலயத்திற்கு, தமது முதலாவது சம்பளத்திலிருந்து  ஐயாயிரம் வெள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆர்.ஆர்.ஐ.எம். ஆலயத்தில் திரண்டிருந்த பக்தர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட டத்தோ ரமணன்,  அவர்களுக்கு  இனிப்புப் பலகாரங்களையும் பண அன்பளிப்பும் வழங்கி இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

மற்றொரு நிலவரத்தில், சுபாங் தோட்ட நீண்ட வீடுகளில் வசிக்கின்ற சுமார் 40 குடும்பங்களையும் டத்தோ ரமணன் நேற்று காலையில் சந்தித்தார்.

வீடு வீடாகச் சென்று அனைவரையும் நலம் விசாரித்த அவர், அவர்களுக்கு இனிப்புப் பலகாரங்களையும் பணமுடிப்பையும் அன்பளிப்பாக வழங்கி தமது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

அக்குடியிருப்பு வாசிகள் எதிர்நோக்கி வருகின்ற வீட்டுமனை பிரச்சினை குறித்தும் கலந்தாலோசித்த அவர், தீர்வுக்கான வழிமுறைகள் இன்னும் தீர்க்கமாக ஆராயப்பட்டு, அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கான கட்டமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப் படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, அப்பகுதியிலுள்ள மற்றொரு நீண்ட வீடுகள் குடியிருப்பான கம்போங் பூங்கா ராயாவுக்கு விரைந்த டத்தோ ரமணணின் சேவை மைய அதிகாரிகளும் தொகுதி கெஅடிலான் கட்சித் தலைவர்களும், அங்குள்ள மக்களுக்கு இனிப்புப் பலகாரங்களையும் பணமுடிப்பையும் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, அன்றிரவு இதர இந்து ஆலயங்களுக்கும் சென்று, டத்தோ ரமணின் சம்பளப் பணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நன்கொடையை வழங்கினர்; பக்தர்களுக்கும் அவரின் புத்தாண்டு அன்பளிப்பை எடுத்து வழங்கினர்.


Pengarang :