ECONOMYMEDIA STATEMENT

பௌத்த சமயத்தினர் மீது மாநில அரசு அக்கறை- வழிபாட்டுத் தலங்களின் நலன் காக்க “லீமாஸ்“ உருவாக்கம்

ஷா ஆலம், மே 7- பௌத்த சமய பக்தர்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் சமய நடவடிக்கைகளின் அதிகரிப்பு காரணமாக வழிபாட்டுத் தலங்களில் நிலவும் அடிப்படை வசதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆக்ககரமான முறையில் தீர்வு காண்பதற்காக மாநில அரசு “லீமாஸ்“ எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு விவகாரக் குழுவை அமைதுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

பௌத்த ஆலயங்கள், கோயில்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மாநில அரசு 80 லட்சம் வெள்ளி நிதியை வழங்கி வருகிறது. இந்த நிதியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை லீமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் சமய நிகழ்வுகளை நடத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள யு12 பௌத்த சமாஹி விஹாரா பூங்காவில் நேற்று நடைபெற்ற மாநில நிலையிலான விசாக தின நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் லீமாஸ் அமைப்பின் இணைத் தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.

பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலாசார படைப்புகள், கண்காட்சி மற்றும் மரம் நடும் இயக்கம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :