ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையம் திறப்பு விழா கண்டது 

ஷா ஆலம், மே 7- இங்குள்ள சுங்கை ரெங்கம் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கை ரெங்கம் மாநாட்டு மையம் நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.

இந்த மண்டபத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியவரும் பிரபல தொழிலதிபரும் மெட்ரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான டத்தோ நா. லோகேந்திரன் இந்த சுங்கை ரெங்கம் மாநாட்டு மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

சுமார் 35 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மாநாட்டு மையத்திற்கு இன்னும் செலுத்த வேண்டிய 650,000 வெள்ளி கடன் தொகையை திரட்டும் நோக்கில் இந்த விருந்து நிகழ்வை பள்ளி வாரியம் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பள்ளி மேலாளர் வாரிய தலைவர் எம். சுகுமாரன், இந்த விருந்து நிகழ்வின் மூலம் திரட்டுவதற்கு தாங்கள் நிர்ணயித்திருந்த இலக்கில் பாதி தொகையை அடைந்து விட்டதாக கூறினார்.

மண்டப நிர்மாணிப்புக்காக பெறப்பட்ட கடனை அடைப்பதற்காக விருந்து, சிற்றுண்டிச்சாலை தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தாங்கள் தொடர்ந்து நடத்தி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 600 பேர் அமரக்கூடிய இந்த மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு மற்றும் கொடை நெஞ்சர்கள் மூலம் தாங்கள் கணிசமான தொகையைப் பெற்றதாக அவர் சொன்னார்.

இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு முற்றுப்பெற்றது. இந்த மண்டபத்தை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு கடனை அடைக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். எனினும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டதால் நிதி திரட்டுவதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றார் அவர்.

இப்பள்ளி அமைந்துள்ள  3.75 ஏக்கர் நிலத்தை பள்ளியின் பெயருக்கு பட்டா பெறுவதற்கு அந்த நிலத்திற்கான 570,000 வெள்ளி பிரீமியத் தொகையை முழுமையாக ரத்து செய்வதற்கு பெரிதும் உதவிய சிலாங்கூர் மாநில அரசுக்கு குறிப்பாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதி ராவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மண்டப நிர்மாணிப்பு தொடர்பில் சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை கண்டு தாங்கள் ஒருபோதும் மனந்தளரப் போவதில்லை எனக் கூறிய அவர், அனைத்து வரவு மற்றும் செலவுகளுக்கும் முறையாக கணக்கு உள்ளதால் பழி சுமத்துவோரைப் புறந்தள்ளி விட்டு தங்கள் பணியை தொடர்ந்து ஆற்றி வரப் போவதாக உறுதிபடத் தெரிவித்தார்.

இப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திருமதி எஸ்.ஸ்ரீ விமலா தேவி இந்நிகழ்வில் சிறப்பு செய்யப் பட்டார்.


Pengarang :