ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தமிழ்ப் பள்ளியில் மாணவர் பதிவு சரிவு கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி அமாட் அம்பலம்.

செய்தி , சு. சுப்பையா

 

கோல சிலாங்கூர்.ஏப்.7- கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் இந்திய மாணவர்கள் பதிவு சரிவு கண்டுள்ளது. இதை இந்தியச் சமூகம் உணர வேண்டுகிறேன்.

அதே வேளையில் இந்தியச் சமுதாயத் தலைவர்கள் தமிழ் பள்ளிகளை தொடர்ந்து கட்டிக் காக்கவும் மாணவர் சரிவைக் கலையவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ டாக்டர்  சூல்கிப்லி அமாட் அறைகூவல் விடுத்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு கோல சிலாங்கூர் வட்டாரத்தில் தங்கும் விடுதியில் கவிஞர் எம். கருணாகரனின்  ” *உள்ளங்கைக் கடவுளும் அஜந்தா பேரழகியும்* ” என்ற புதுக் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடை பெற்றது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணிசமான தொகை கொடுத்து நூல்  வாங்கியும் சிறப்பித்ததுடன், அத்தொகைக்கு ஈடான  கவிதை நூல்களை, தனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு இலவசமாக கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் 80 சதவிகித இந்தியர்கள் தனது வெற்றியை உறுதி செய்ய வாக்களித்துள்ளனர். அவர்களின் ஆதரவுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு சேவை செய்வேன் என்று அவர் தொடர்ந்து பேசுகையில் கூறினார். இந்தியர்கள் தங்கள் அரசியல் தேவைகளுக்குத் தாராளமாக தன்னை நாடி வரலாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதே போல் கடந்த பொதுத் தேர்தலில் எனக்கு 90% சதவிகித சீனர்களின் வாக்கும் கிடைத்தது. சீனர்கள், இந்தியர்களின் பேராதரவுக்கு நன்றி. உங்களுக்கு சிறப்பான சேவை வழங்குவேன். இந்தியச் சமுதாயத் தலைவர்கள் சமுதாயத்திற்கு  தேவையானவை கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைநகரை விட்டுத் தொலைவில் இலக்கிய நிகழ்ச்சிக்கு தமிழ் சமூகம் பேராதரவு கொடுக்கும் என்பதை நிகழ்ச்சி உறுதி செய்தது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் இவ் வட்டாரத்தில் தமிழ்க் கல்வி சேவை வழங்கி இவ் வட்டாரத்தைச் சேர்ந்த மூத்த  முன்னாள் தலைமை ஆசிரியர் ரெங்கசாமி, நாடறிந்த ஏ.எம்.ஆர் நகைச்சுவை கலைஞர் எம். முருகேசு, கோல சிலாங்கூர் வட்டாரப் பொதுநலத் தொண்டர்  அப்பு ஆறுமுகம் ஆகியோரை நூலாசிரியர் எம்.கருணாகரன் பொன் ஆடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து கௌரவித்தார்.


Pengarang :