ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“சித்தம்“ ஏற்பாட்டிலான உணவு கையாளுதல் மற்றும் டைபாய்டு தடுப்பூசி பயிற்சி நாளை நடைபெறுகிறது

ஷா ஆலம், மே 13- சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் (சித்தம்) ஏற்பாட்டிலான 2023ஆம் ஆண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நாளை 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்தின் கீழ்த்தளத்தில் நடைபெறவுள்ளது.

பல்வேறு பயன்மிக்க அங்கங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்வு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று சித்தம் நிர்வாகி எஸ்.கென்னத் சேம் கூறினார்.

உணவு விற்பனைத் துறையில் ஈடுபட்டவர்களை இலக்காக கொண்ட இந்த பயிற்சியில் உணவுகளை பாதுகாப்பான முறையில் சமைப்பது, பரிமாறுவது மற்றும் டைப்பாய்டு தடுப்பூசி பெறுவது குறித்து தெளிவாக விளக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சித் திட்டத்தில் ஐம்பது பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறிய அவர், குறைந்த வருமானம் பெறும்  பி40 தரப்பினருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

இந்த பயிற்சியில் கலந்து கொள்வோர்  டைபாய்டு தடுப்பூசியை அங்கேயே பெறுவதற்குரிய வாய்ப்பினையும் பெறுவர் என்பதோடு அவர்களுக்கு டைபாய்டு கார்டும் வழங்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சியை ஹிஜ்ரா இடைக்கால தலைமைச் செயல்முறை அதிகாரி நோர்மிஸா யாஹ்யா முடித்து வைத்து பயிற்சியின் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவார் என்று கென்னத் மேலும் சொன்னார்.


Pengarang :