ALAM SEKITAR & CUACANATIONAL

வெப்ப வானிலை காரணமாக பெக்கானில் 30 ஹெக்டர் பகுதியில் தீ!

குவாந்தான், மே 13- கடுமையான வெப்ப வானிலை காரணமாக பெக்கான் நகரின் ஜாலான் பெக்கான் நெனாசியில் கே.எம்.டி. தோட்டத்திற்கு அருகில் உள்ள 30 ஹெக்டர் காட்டுப் பகுதியில் இன்று தீ ஏற்பட்டது.

இந்த தீச்சம்பவம் தொடர்பில் காலை மணி 7.55 அளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமது ஜைடி வான் இசா கூறினார்.

பெக்கான், பெராமு, நெனாசி மற்றும் காபேங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 26 அதிகாரிகளும் வீரர்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறிய அவர், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

தீ ஏற்பட்ட பகுதி சதுப்பு நிலக் காட்டுப் பகுதியாக என்பதால் தற்போதைய வெப்ப நிலை காரணமாக சிறிய தீப்பொறி கூட பெரிய அளவில் தீவிபத்து ஏற்படக் காரணமாகி விடுகிறது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் பணியில் அருகிலுள்ள தோட்டத்தை சேர்ந்த 11 ஊழியர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாக கூறிய அவர், தீயின் தாக்கத்தை கண்டறிவதற்காக டிரேன் கருவி பயன்படுத்தப்படுகிறது என்றார்.


Pengarang :