ECONOMYMEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் தொகுதியில் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், மே 29- கோத்தா கெமுனிங் தொகுதியில் இன்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைக்கு பொது மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பு கிடைத்தது.

கம்போங் பாரு ஐக்கோம், பாசார் மாலாம் வளாகத்தில் நடைபெற்ற இந்த விற்னையின் போது ஒரு மணிக்கு குறைவான நேரத்தில் 500 கோழிகளும் 300 தட்டு முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் அரிசி, மாட்டிறைச்சி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களுக்கும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

வட்டார மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டதாக பி.கே.பி.எஸ். சந்தைப் பிரிவுக்கான  துணை நிதி நிர்வாகி நுரீன் முகமது ஃபாத்தில் கூறினார்.

இந்த விற்பனையில் கோழி மற்றும் முட்டைக்கு அதிக வரவேற்பு இருந்தது. இதில் கலந்து கொண்ட அனைவரின் முதன்மைத் தேர்வு பொருள்களாக இவ்விரு உணவுப் பொருள்களும் விளங்கின. மலிவான விலை காரணமாக இதரப் பொருள்களும் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 8.00 மணியளவில் நாங்கள் இந்த விற்பனை பகுதிக்கு வந்த போது வரிசை எண்களைப் பெறுவதற்காக பொது மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனை வட்டார குடியிருப்பாளர் சங்கத்தின் ஆதரவுடன் மிகவும் சீரான முறையில் நடைபெற்றதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :