MEDIA STATEMENT

மழைக்கு ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகளை கார் மோதியது- மூவர் மரணம் 

கோலாலம்பூர், ஜூன் 4- மேம்பாலம் அடியில் மழைக்கு ஒதுங்கிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் மூவர் மரணமடைந்ததோடு மேலும் மூவர் காயங்களுக்குள்ளாயினர்.

இச்சம்பவம், புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின்  (என்.கே.வி.இ.) 19.6வது கிலோ மீட்டரில் தெற்கு நோக்கிச் செல்லும் தடத்தில் பெட்டாலிங் ஜெயா அருகே இன்று அதிகாலை நிகழ்ந்தது.

அதிகாலை 5.59 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் மேலும் மூவர் காயங்கள் காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் 19 முதல் 37 வயதுடைய உள்நாட்டினர் எனக் கூறிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கடுமையான காயங்களுக்காக சிவப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார் என்றார்.

தலைநகரிலிருந்து சைபர் ஜெயா நோக்கிச் சென்று கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஓட்டிய ஹொண்டா ஹேச்பேக் ரகக் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளேட்டிகளை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அந்த கார் ஓட்டுநர் அனுமதிக்கப் பட்டதைக் காட்டிலும் அதிக அளவில் மதுபானம் அருந்தி இருந்தது பரிசோதனையின் முடிவுகள் காட்டுகின்றன என்றார் அவர்.


Pengarang :