ECONOMYSELANGOR

கோத்தா டாமன்சாராவில் மலிவு விற்பனை- ஒரு மணி நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 4- கோத்தா டாமன்சாரா தொகுதியில் இன்று காலை நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை மழையின் காரணமாக சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் காலை 7.30 மணி முதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.

தாமான் சுபாங் பாரு, டேவான் புடிமானில் இந்த விற்பனை தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன. இவ்வட்டார மக்களின் அமோக ஆதரவு காரணமாக இந்த மலிவு விற்பனையைத் தாங்கள் அடிக்கடி இத்தொகுதியில் நடத்தி வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷதாரி மன்சோர் கூறினார்.

இந்த மலிவு விற்பனைக்கு இத்தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்தகைய விற்பனைகளை அடிக்கடி நடத்தும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் இது போன்ற மலிவு விற்பனை திட்டங்கள் அத்தியாவசியப் பொருள்களுக்கான செலவினத்தை பெரிதும் குறைக்க உதவுவதாக அவர்கள் தெரிவித்தனர் என்றார் அவர்.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நடைபெற்ற இந்த மலிவு விற்பனையின் வாயிலாக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் பேர் பலனடைந்தனர். இக்காலக்கட்டத்தில் சுமார் 1 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள விற்பனை பதிவானது.


Pengarang :