MEDIA STATEMENTNATIONAL

மத விவகாரங்களை அரசியல் சர்ச்சையாக ஆக்க வேண்டாம்- மலேசியர்களுக்கு பேரரசர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 5- சமய விவகாரங்களை அரசியல் சர்ச்சைகளாகவோ விவாதப் பொருளாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைத்து மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நினைவுறுத்தி உள்ளார்.

இந்நாட்டின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சமயத்தின் தலைவர்கள் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என  அவர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம், மற்ற சமயங்களை அமைதியான முறையில் கடைபிடிக்கலாம். மலேசியர்களின் சகிப்புத் தன்மையும் பன்முகத் தன்மையும் நாட்டின் முதன்மையான சக்தியாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, வலுவான, வெற்றிகரமான, அதிகாரம் கொண்ட, கண்ணியமிக்க ஒரு தேசத்தை உருவாக்க நாம் அனைவரும் பிரிவினை என்ற வாதத்தை புறந்தள்ளி நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒன்றிணைய வேண்டும் என அவர் கூறினார்.

தனது அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு தொலைக்காட்சி வழியாக வழங்கிய உரையில் மாமன்னர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

கடந்தாண்டு, நாட்டில் 15வது பொதுத் தேர்தலும் கூட்டரசு அரசாங்கத்தின் நியமனமும் சீராகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது.

கடந்த எழுபது ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஜனநாயக நடைமுறை இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை இது  காட்டுகிறது. நாட்டின் நிலைத்தன்மைக்கான சுபிட்சத்திற்கு இந்த ஜனநாயக அடித்தளமாக விளங்குகிறது என்றார் அவர்.


Pengarang :