ECONOMYGALERINATIONAL

பத்தாண்டு கால போராட்டத்திற்கு பலன் கிடைத்தது- சிறந்த விளையாட்டாளராக தேர்வு பெற்ற ஷாமேந்திரன் பெருமிதம்

ஷா ஆலம், ஜூன் 5- விளையாட்டுத் துறையில் கடந்த பத்தாண்டுகளாக தாம் நடத்திய போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் உரிய பலன் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் மாநிலத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளராக தேர்வு பெற்ற கராத்தே விளையாட்டாளரான ஆர். ஷமேந்திரன் பெருமிதம் பொங்க கூறினார்.

கம்போடியாவில் அண்மையில் நடைபெற்ற 2023 சீ போட்டியில் 75 கிலோவுக்கும் கீழ்ப்பட்ட பிரிவில் தங்கம் வென்ற தமக்கு மாநில அளவில் வழங்கப்படும் முதல் அங்கீகாரமாக இது விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

2023 கம்போடியா சீ போட்டியில் தேசிய கொடியை ஏந்தி வரும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட எனக்கு இந்த விருது இன்னொரு அங்கீகாரமாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டைப் பிரதிநிதித்து பல்வேறு போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன். கராத்தே விளையாட்டின் மூலம் நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தர நான் மேற்கொண்ட அயராத முயற்சிக்கு கிடைத்த பிரத்தியேகப் பரிசாக இதனைக் கருதுகிறேன் என்றார் அவர்.

வழக்கமான வாழ்க்கையைத் தவிர்த்துக் பயிற்சியில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய நிர்பந்தம், குடும்பத்தை பிரிந்திருக்கும் சூழல் போன்றவை வெற்றிகளைப் பெறுவதற்கு தாம் புரிந்த தியாகங்களாகும் என என அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளராக ஷாமேந்திரனும் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக பூப்பந்து விளையாட்டாளர் எம்.தினாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாமேந்திரன் 10,000 வெள்ளி ரொக்கப் பரிசு, வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழைப் பெற்றார்.


Pengarang :