ECONOMYNATIONAL

600 கிலோ காகிதக் கட்டு விழுந்து லாரி ஓட்டுநர் மரணம்-புக்கிட் மெர்தாஜாமில் சம்பவம்

புக்கிட் மெர்தாஜம், ஜூன் 29- அரை டன்னுக்கு மேல் எடை கொண்ட காகிதக் கட்டு விழுந்து லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் புக்கிட் மின்யாக்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்தது.

இச் சம்பவத்தை தொடர்ந்து காகிதக் கட்டுகளை ஏற்றி இறக்கும் பணியை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்திற்கு பினாங்கு மாநில தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார இலாகா உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கள் கிழமை இரவு 7.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 36 வயதுடைய உள்நாட்டு ஆடவர் சுமார் 600 கிலோ எடையுள்ள காகிதக் கட்டினால் நசுக்கப்பட்டு உயிரிழந்ததாக அவ்விலாகாவின் இயக்குநர் ஹைரோஸி அஸ்ரி கூறினார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த கொள்கலன் லாரி ஓட்டுநர் துணை குத்தகை நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டவர் என்பதும் விநியோகிப்பாளர் இடமிருந்து பெறப்பட்ட மறுசுழற்சி காகித கட்டுகளை கொள்கலன் மூலம் சேர்ப்பிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்ததும் தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஹைரோஸி தெரிவித்தார்.

அந்த கொள்கலன் லாரி தொழிற்சாலையை அடைந்ததும் அதன் ஓட்டுநர் கொள்கலனின் பின்புறக் கதவைத் திறந்து லோரியின் பின்புற விளக்கை எரிய விட முயன்றுள்ளார். அப்போது கொள்கலனில் இருந்த 600 கிலோ காகிதக் கட்டு அவர் மீது விழுந்துள்ளது என அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து இந்த விபத்து தொடர்பான விசாரணை முடியும் வரை காகிதக் கட்டுகளை ஏற்றி இறக்கும் பணிகளை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அந்த தொழிற்சாலைக்கு தாங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :