ECONOMYMEDIA STATEMENT

சாலையின் எதிர் திசையில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 13 வயது சிறுவன் கைது

ஷா ஆலம், ஜூன் 30- வானமோட்டும் லைசென்ஸ் இன்றி நான்கு பயணிகளுடன் காரை ஓட்டிய குற்றத்திற்காக 13 வயதுச் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கெமாமான், சுக்காயில் நேற்று மாலை 5.15 மணியளவில் நிகழ்ந்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஹன்யான் ரம்லான் கூறினார்.

அந்த பதின்ம வயதுச் சிறுவன் சாலையின் எதிர் திசையில் மிகவும் ஆபத்தான முறையில் வெள்ளை நிற புரோட்டோன் சாகா காரை ஓட்டி வந்ததாக அவர் சொன்னார்.

காரை நிறுத்தும் படி போலீசார் இட்ட உத்தரவை மீறிய அச்சிறுவன் காரை படுவேகத்தில் செலுத்தி அங்கிருந்த தப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு அந்த காரைப் பின்தொடர்ந்த போலீசார் சுய சலவை நிலையம் அருகே ஒதுங்கிய அந்த காரை தடுத்து நிறுத்தி அதிலிருந்த நால்வரைக் கைது செய்தனர் என்றார் அவர்.

பல்வேறு சாலை குற்றங்களுக்காக அந்த சிறுவனுக்கு ஆறு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதோடு அந்த காரும் பறிமுதல்  செய்யப்பட்டது. லைசென்ஸ் இல்லாத நபரை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக கார் உரிமையாளருக்கும் சம்மன் வழங்கப்பட்டது என அவர் சொன்னார்.


Pengarang :