ECONOMYMEDIA STATEMENT

காஜாங்  தீ விபத்தின் எதிரொலி- லங்காட் ஆற்று நீரின் தரம் மீது லுவாஸ் தீவிரக் கண்காணிப்பு

ஷா ஆலம், ஜூலை 2- காஜாங், புடிமான் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த ஏழு தொழிற்சாலைகள் மற்றும் ஒரு பொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து லங்காட் ஆற்றில் மாசுபாடு ஏற்படும் சாத்தியம் உள்ள இடங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு மற்றும் நீரின் மாதிரியைச் சோதனையிடும் நடவடிக்கையை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்த் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் தெராஸ் ஜெர்னாங் பாலத்திலும் மேற்கொள்ளப்படும் வேளையில் கழிவு நீரின் வெளியேற்றம் முறையாக மேற்கொள்ளப்படுவது உறுதி செய்ய தீ விபத்து ஏற்பட்ட இடத்திலும் கண்காணிப்பு பணி  மேற்கொள்ளப்படுகிறது என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

லங்காட் ஆற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நீரில் துர்நாற்ற அளவு 2 டோன் என்ற அளவில் இருந்ததைத் தொடர்ந்து இதுகுறித்து ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீர் சுத்திகரிப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, நேற்று மாலை 3.00 மணி தொடங்கி மூன்று மணி நேரத்திற்கு செராஸ், பத்து 11 நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கச்சா நீரை அனுப்பும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் விடியற்காலை 2.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் காஜாங், புடிமான் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஏழு தொழிற்சாலைகளும் ஒரு  பொருள் சேமிப்பு கிடங்கும் முற்றாக அழிந்தன.


Pengarang :