ECONOMYMEDIA STATEMENT

மாநிலத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் போக்குவரத்து முறையை மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை

ஷா  ஆலம், ஜூலை 2- சிலாங்கூரில் பொது போக்குவரத்து முறையை குறிப்பாக, மாநிலத்தின் வட மற்றும் தென் பகுதிகளில் எதிர்காலத்தில் மேம்படுத்த மாநில அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் கூடுதல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதன் மூலம் அப்பகுதிகளின் வசிப்பிடச் சூழலுக்கு மதிப்பை கூட்ட இயலும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொது போக்குவரத்து நமது பிரதான இலக்காக உள்ளது. குறிப்பாக இரயில் சேவை மாநிலத்தின் தென் பகுதியை இன்னும் அடையவில்லை. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நாம் எவ்வாறு மாநிலத்தின் தென் பகுதி அல்லது வட பகுதியுடன் இணைப்பது? என அவர் வினவினார்.

உதாரணத்திற்கு தற்போது கிள்ளான் வரை மட்டுமே இரயில் சேவை உள்ளது. அதனை கோல சிலாங்கூர் அல்லது சபாக் பெர்ணம் வரை இணைத்தால் அங்குள்ளவர்களும் கோலாலம்பூரில் வேலை செய்வதற்குரிய வாய்ப்பு கிட்டும். இது தவிர அங்கு சொத்துகளின் மதிப்பும் உயர் காணும் என்றார் அவர்.

தஞ்சோங் சிப்பாட், பந்தாய் பத்து லாவுட்டிலிருந்து இன்று காலை நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செலாமாட் பாகி மலேசியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களில் இருந்து சிலாங்கூருக்கு வருவோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதால் மாநிலத்தில் பொது போக்குவரத்து முறை மேலும் உயர்த்தப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாநிலத்தின் மக்கள் தொகை 48 லட்சம் பேராக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 68 லட்சம் பேராக உயர்ந்து விட்டது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும் என்றார் அவர்.


Pengarang :