ECONOMYSUKANKINI

ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானம் செப்டம்பரில் தொடங்கி 2026 இல் முற்றுப்பெறும்

ஷா ஆலம், ஜூலை 2- சுமார் 76.08 ஹெக்டர் பரப்பளவை உட்படுத்திய ஷா ஆலம் விளையாட்டுத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரங்கின் கட்டுமானப் பணிகள் வரும் 2026ஆம் ஆண்டில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலத்தின் விளையாட்டுத் துறை சீரான வளர்ச்சியைப் பெறுவதை  உறுதி செய்வது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த அரங்கம் நிர்மாணிக்கப் படுவதாக அவர் சொன்னார்.

இந்த அரங்கம் எவ்வாறு செயல்படும் என்ற அணுகுமுறையை மாற்ற விரும்புவதால் கூடிய பட்சம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இதன் கட்டுமானப் பணிகளைத் தொடக்கவுள்ளோம் என்று செலாமாட் பாகி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தின் விளையாட்டுத் தொடர்பான வாய்ப்புகளும் திறமைகளும் தலைமுறை கடந்தும் ஆக்கமுடன் செயல்பட்டு வர வேண்டும் என்பதால் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக அமல் படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

கடந்த 90ஆம் ஆண்டுகளில் நாம் விளையாட்டுத் துறையில் சாம்பியனாக விளங்கி வந்தோம். ஆனால் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு திரங்கானு, கோலாலம்பூர் போன்ற மாநிலங்கள் நம்மை முந்தி விட்டன. காரணம் அவர்களிடம் விளையாட்டுத் தொடர்பான சீரான மேம்பாட்டுத் திட்டங்கள் இருந்தன என்றார் அவர்.

தற்போதைக்கு நமக்கு தேவைப்படுவது நிலையான விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களாகும். அதற்கு நமக்கு தேவைப்படுவது போதுமான நிதியும் அடிப்படை வசதியும் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :