ECONOMYMEDIA STATEMENT

கோத்தா ராஜா தொகுதியில் மலிவு விற்பனை- 45 நிமிடங்களில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன

ஷா ஆலம், ஜூலை 8-  இங்குள்ள கம்போங் பாரு ஹைக்கோமில் இன்று காலை நடைபெற்ற கோத்தா ராஜா தொகுதி நிலையிலான ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது 45 நிமிடங்களில் 400 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

பத்து வெள்ளியில் கோழிகளை வாங்குவதற்குரிய வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்பதில் பொது மக்கள் முனைப்பு காட்டியதால் இங்கு விற்பனை பெரும் பரபரப்புடன் நடைபெற்றதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் சந்தை மற்றும் சொத்துடைமை விற்பனைப் பிரிவின் தலைமை நிர்வாகி பாஸிர் லத்திப் கூறினார்.

இன்றைய இந்த நிகழ்வில் 300 முதல் 400 பேர் வரை கலந்து  கொண்டனர். இங்கு கோழிதான் பிரதான விற்பனைப் பொருளாக இருந்தது. 45 நிமிடங்களில் 400 கோழிகள் விற்கப்பட்டு விட்டன. சந்தையில் ஒரு  கோழியின் விலை வெ.18.00 முதல் வெ.20.00 ஆக இருக்கும் நிலையில் இங்கு வெறும் 10.00 வெள்ளிக்கு அந்த உணவுப் பொருளை வாங்க முடிகிறது என்றார் அவர்.

இந்த விற்பனைக்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் சிறப்பாக இருந்தது. வெயில் கடுமையாக இருந்த காரணத்தால் காலை 9.45 மணிக்கெல்லாம் விற்பனைத் தொடங்கி விட்டோம். பொருள்களை வாங்க மக்கள் காலை முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினார்கள் என  அவர் மேலும் சொன்னார்.

பொது மக்களின் அமோக ஆதரவைக் கருத்தில் கொண்டு கோத்தா கெமுனிங் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் இந்த விற்பனைக்கு முன்னுரிமை அளித்ததாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு முட்டை 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது


Pengarang :