EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

வேட்பு மனு தாக்கல் மையம் அருகே ட்ரோனை பறக்கவிட்டவர்கள் கைது

கோத்தாபாரு, ஜூலை 30-  மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மையம் அருகே டிரோன் சாதனத்தை பறக்க விட்டச் சந்தேகத்தின் பேரில் 14 வயது இளைஞர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்

முதல் சம்பவம் பாசீர் மாஸ் புனுட் சுசுவில் உள்ள தொழில்திறன் கல்லூரியில் உள்ள வேட்பு மனுத் தாக்கல் மையத்தில்  நேற்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்ததாக  கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருண் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் அந்த டிரோன் சாதனத்தை இறக்கும் படி 55 வயதான சந்தேக நபருக்கு  போலீசார் உத்தரவிட்டனர். அந்த நபரிடமிருந்து டிஜேஐ மினி 3 ப்ரோ ட்ரோன் சாதனம் மற்றும் ஒரு தொலை கட்டுப்பாட்டு கருவியை போலீசார் கைப்பற்றினர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகளுக்காக பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவம் பெங்காலான் செப்பாவிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின்  கோத்தா பாரு வளாகத்தில் உள்ள வேட்பு மனுத் தாக்கல் மையத்தில் காலை 10.03  மணியளவில் நிகழ்ந்ததாக முகமது ஜாக்கி கூறினார்.

சம்பவத்தின் போது  14 வயது வாலிபர் ஒருவர் டிரோன் சாதனத்தை பறக்க விட்டுக் கொண்டிருந்தார்.  அந்த சாதனத்தை இறக்கும் படி உத்தரவிட்ட போலீசார் டிரோன் சாதனம் மற்றும் ஐபோன் 7 பிளஸ் கைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேல் நடவடிக்கைக்காக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர் கூறினார்.


Pengarang :