ELMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் முயற்சியால் சீபீல்டு ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களின் நிலப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு- அமிருடின்

ஷா ஆலம், ஆக 5- சிலாங்கூர் மாநிலத்தில் இந்து ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் நிலப் பிரச்சனைக்கு மாநில அரசு சுமூகமான முறையில் தீர்வு கண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநில அரசின் சீரிய முயற்சியின் வாயிலாக சுபாங் ஜெயா, சீபீல்டு தோட்ட ஆலயம் உள்பட பல வழிபாட்டுத் தலங்கள் எதிர் நோக்கி வந்த நிலப் பிரச்சனை தீர்க்கப்பட்டு அவை முறையாக செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நேற்று, இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்திய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் இதனைக் கூறினார்.

லீமாஸ் எனப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப் விவகாரக் குழுவை அமைத்த காரணத்தால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஆலயங்கள் அமலாக்கத் தரப்பினரால் உடைபடும் சம்பவங்கள் வெகுவாக குறைந்து வீட்டதாகவும் அவர் சொன்னார்.

கிறிஸ்துவ, பௌத்த, இந்து, தாவ், சீக்கியம் ஆகிய ஐந்து மதங்களை உள்ளடக்கிய இந்த லீமாஸ் அமைப்பின் உருவாக்கத்தின் வாயிலாக வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. 

ஆலயங்களை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையின் மூலம் அதிகப்படியானத் தொகையை நிலப் பிரீமியமாக ஆலயங்கள் செலுத்த வேண்டிய நிர்பந்தமும் தவிர்க்கப்பட்டது என அமிருடின் குறிப்பிட்டார்.

சீபீல்டு தோட்ட ஆலயம் போல் ஒரு சில இடங்களில்  பிரச்சனைகள் எழுந்தாலும் அவை சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டன. மாநில அரசின் விவேகமான அணுகுமுறையின் காரணமாக சீபீல்டு ஆலயம் எந்த பாதிப்பும் இன்றி செயல்படும் அதே வேளையில் அப்பகுதியில் மேம்பாட்டுப் பணிகளும் சீராக மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

அதோடு மட்டுமின்றி மதம், இனத்தைப் பயன்படுத்தி இவ்விவகாரத்தை வன்முறை பாணியில் அணுக முயன்ற தரப்பினரின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது என்று  அமிருடின் தமதுரையில் மேலும் சொன்னார்.


Pengarang :