ECONOMYMEDIA STATEMENTSI

மாநகர அந்தஸ்துக்கேற்ப கிள்ளான், லிட்டில் இந்தியா மேம்படுத்தப்படும்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஆக 5- கிள்ளான் நகரின் மாநகர அந்தஸ்துக்கு ஏற்ப இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதி மேம்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அரச நகர் என்ற முறையில் இந்த பிரசித்தி பெற்ற வர்த்தக மையத்தின் அடையாளமும் தனித்துவமும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கிள்ளான் மாநகரமாக பிரகடனப்படுத்தப்படும் என்ற ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சின் அறிவிப்புக்கு ஏற்ப இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதி தரம் உயர்த்தப்படுவதை தாம் உறுதி செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச நகர் என்ற முறையில் கிள்ளான் நகரின் அடையாளத்தை தொடர்ந்து பாதுகாக்க விரும்புகிறோம். அதே சமயம் செட்டி பாடாங் போன்ற கிள்ளான் நகரின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த இடங்களையும் நிலை நிறுத்த முனைப்பு காட்டி வருகிறோம் என்றார் அவர்.

இவ்விவகாரத்தை தாம் கவனத்தில் கொண்டுள்ளதோடு  இதனை கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கவனத்திற்கு கொண்டுச் செல்லவுள்ளதாக இங்குள்ள மிட்ணட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்திய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார். 

இதனிடையே, கிள்ளான், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சாலைகளுக்கு சமுதாயத்திற்கு பங்காற்றிய இந்தியத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டுவது குறித்து கருத்துரைத்த அமிருடின், பிரதான சாலைகளுக்கு பெயரிடும் அதிகாரம் மத்திய அரசின் வசம் இருந்தாலும் சிறிய சாலைகளைப் பொறுத்த வரை அந்த அதிகாரத்தை ஊராட்சி மன்றங்கள் கொண்டுள்ளதால் ஊராட்சி மன்றங்கள் வாயிலாக  இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்றார்.


Pengarang :