ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சபாவில் 4  தொகுதிகள் காலியானதாக அறிவிக்கக் கோரும் பெர்சத்து கட்சியின் முயற்சிக்கு  ஏ.ஜி.அலுவலகம் எதிர்ப்பு

கோலாலம்பூர், ஆக 30 – மக்களவை சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் மற்றும் சபாவைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யும் பெர்சத்து கட்சியின் விண்ணப்பத்திற்கு சட்டத் துறைத் தலைவர் அலுவலகம்  (ஏஜிசி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நான்கு எம்.பி.க்கள் பதவி வகிக்கும் தொகுதிகள் காலியானதாக ஜோஹாரி அறிவிக்க வேண்டும் எனக் கோரி  பெர்சத்து கட்சி  சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 63 வது பிரிவின்படி இந்த முடிவு நீதித்துறை சீராய்வுக்கு உகந்தது அல்ல என்பதால் பெர்சத்து கட்சியின் இந்த  விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என்று சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் சார்பில் ஆஜரான மூத்த கூட்டரசு வழக்கறிஞர் அகமது ஹனிர் ஹம்பாலி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 49 வது பிரிவில் கூறப்பட்டுள்ள கட்சித் தாவல் தடைச் சட்டம், அரசியலமைப்பின் 63 வது பிரிவின் காரணமாக நீதித்துறை சீராய்வுக்கு ஏற்றதாக இல்லை  என்று அவர் நீதிபதி டத்தோ அமர்ஜித் சிங் முன் சமர்ப்பித்த வாதத் தொகுப்பில் கூறினார்

நாடாளுமன்ற சபை அல்லது அதன் எந்தக் குழுவிலும் நடக்கும் எந்த ஒரு நடவடிக்கையின் செல்லுபடியாகும் தன்மை குறித்து எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்பக் கூடாது என்று 63வது சட்டப்பிரிவு  கூறுகிறது என அவர் வாதிட்டார்.

நீதித்துறை சீராய்வுக்கான விண்ணப்பத்தை பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி மற்றும் டத்தோ முகமது சுஹைமி யாஹ்யா ஆகியோர் கட்சியின் பொறுப்பாளர்கள் என்ற முறையில் கடந்த ஏப்ரல் 17 அன்று தாக்கல் செய்தனர்.

ஜொஹாரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டத்தோ ஆர்மிசான் முகமட் அலி (பாப்பர்), கைருல் பிர்டாவுஸ் அக்பர் கான் (பத்து சாப்பி),

டத்தோ ஜொனாதன் யாசின் (ரானாவ்) மற்றும் டத்தோ மத்பாலி மூசா (சிபித்தாங்) ஆகியோரை ஓன்று முதல் ஐந்தாவது பிரதிவாதிகளாக பெர்சத்து பெயர் குறிப்பிட்டுள்ளது.

கூட்டரசு அரசியலமைப்பு 49ஏ பிரிவுக்கு ஏற்ப அந்த  நான்கு எம்.பி.க்களும் மக்களவை உறுப்பினர்களாக இருப்பதை நிறுத்தி விட்டதாக அறிவிக்கவும் அந்த  நான்கு தொகுதிகளும்  காலியானதாக  ஜோஹாரி அறிவிக்கவும் கோரி பெர்சத்து மனுத் தாக்கல் செய்துள்ளது.


Pengarang :