ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்களின் பொருளாதார மீட்சிக்கான எதிர்பார்ப்பை  பூர்த்தி செய்ய  துரிதமான, துல்லியமான முடிவுகளை எடுப்பீர்-  சுல்தான் வேண்டுகோள்

ஷா ஆலம், ஆக 31 – அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பொருளாதார அபிலாஷைகளை மீட்டெடுக்க முயற்சிக்குமாறு அரசாங்கத் தலைமைத்துவத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்  வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்துலக அளவில், குறிப்பாக முதலீடு மற்றும் பொருளாதாரத் துறைகளில் வெற்றிகரமான மற்றும் போற்றப்படும் ஒரு சுதந்திர நாடாக மலேசியா மாறுவதைக் காண தாம் விரும்புவதாக   சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேன்மை தங்கிய சுல்தான் தெரிவித்தார்.

தேசபக்தியின் உணர்வை மீண்டும் தூண்டுவதற்கும், நாட்டின் மீதான அன்பு மற்றும் பாச உணர்வை வளர்ப்பதற்கும்  சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை போற்றுவது முக்கியம்  என மலேசியாவின்  66 வது தேசிய தினத்தையொட்டி மக்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர்  மீண்டும் நினைவூட்டினார்.

இந்த உணர்வு ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் வடிவில் வெளிப்பட்டு நாட்டின் பொருளாதார செழுமையையும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நல்வாழ்வையும் பராமரிக்க உதவும்  என்று  மேன்மை தங்கிய சுல்தான்  நம்பிக்கைத் தெரிவித்தார்.

சுதந்திரம் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்வதன் உண்மையான  அர்த்தத்தை  அனைத்து மக்களும்  மனதில் நிலைநிறுத்தும் பட்சத்தில் எந்தத் தரப்பினராலும் அமைதியைக் குலைக்கும் வகையில்  வெறுப்பையும் அவதூறுகளையும் பரப்ப முடியாது என்றும் அவர் கூறினார்.

மேன்மை தங்கிய சுல்தான் மற்றும் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் சிலாங்கூர் மற்றும் மலேசிய மக்கள் அனைவருக்கும் 2023 தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


Pengarang :