ECONOMYMEDIA STATEMENT

அரசாங்கத்தை விமர்சிக்கலாம், ஆனால் 3ஆர் விவகாரங்களை தொடாதீர்கள்- பிரதமர் எச்சரிக்கை!

ஜோகூர் பாரு, செப் 4- இனங்களுக்கிடையே பிளவு ஏற்படும் அளவுக்கு அவதூறுகளை பரப்பி வரும் தரப்பினர் விஷயத்தில் ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடை பிடிக்காது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களைக் கண்டு தாம் ஒருபோதும் கலக்கமடைய போவதில்லை எனக் கூறிய அவர், அதே சமயம், இந்நாட்டிலுள்ள பல்லின மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு சில தரப்பினர் அவதூறு பரப்புவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

பிரதமரையும் அரசாங்கத்தையும் விமர்சனம் செய்வோருக்கு எதிராக நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப் படுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் 3ஆர் விவகாரங்களை (இனம், சமயம் மற்றும் ஆட்சியாளர்கள்) தொட்டு அவதூறான கருத்துக்களை பரப்ப முயன்றால் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும்  விமர்சனம் செய்யலாம்.. ஆனால், மலாய்க்காரர்கள் சீனர்களை வெறுக்கும் வகையில் அவதூறு பரப்பினால், சமயத்தை பயன்படுத்தி மற்றவர்களை காபிர்கள் என குற்றஞ்சாட்டினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு இங்குள்ள பெர்லிங், தாமான் ஊடாவில் நேற்றிரவு நடைபெற்ற  மடாணி ஒற்றுமைப் பேரணியில் உரையாற்றிய போது  அன்வார் இவ்வாறு சொன்னார்.

இந்த நிகழ்வில் அமானா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சாபு, ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி, பூலாய் தொகுதி பக்கத்தான் வேட்பாளர் சுஹாய்சான் காய்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தீவிரவாதப் போக்குடைய மற்றும் வெறுப்பு அரசியலை நடத்தி வரும் தரப்பினரை வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கு குறிப்பாக, மலாய்க்காரர்களுக்கு உதவும் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஜசெக தடையாக உள்ளது என்ற இன உணர்வு சார்ந்த விவரங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் இன வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு ஜசெக எப்போதும் ஆதரவு வழங்கி வருகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்


Pengarang :