ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஆசியான் சாசனத்தை மியன்மார் கடைபிடிக்க வேண்டும்- அன்வார் வலியுறுத்து

ஜாகர்த்தா, செப் 6 –  ஆசியான் உறுப்பு நாடு என்ற முறையில் மியன்மார் தனது கடமையை முறையாக  நிறைவேற்ற வேண்டும். அதேவேளையில் ஆசியான் சாசனத்தின் விதிகளையும் அது பின்பற்ற  வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

 ஐந்து அம்ச கருத்திணக்கத்தை  (5பிசி) அமல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது மற்றும் மியன்மாரில் தொடர்ச்சியான உறுதியற்ற நிலைத்தன்மை நிலவுவது குறித்த மலேசியாவின் ஏமாற்றத்தையும் அவர்  வெளிப்படுத்தினார்.

 மியன்மார் பிரச்சனையை  ஒருங்கிணைந்த அணுகுமுறையில் ஆசியான் தீர்க்க வேண்டும். இந்நோக்கத்திற்காக  ஐக்கிய நாடுகள் சபை உட்பட அதன்  அனைத்து கலந்துரையாடல் பங்காளிகளையும் ஆசியான் பயன்படுத்த வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன் என்று ஆசியான் உச்சநிலை மாநாட்டு கலந்துரையாடலின் போது அன்வார் குறிப்பிட்டார்.

மியன்மாரில் 5பிசி கருத்திணக்கத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆழமான விவாதங்களைத் தவிர்த்து  இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் பார்வை குறித்தும் பிராந்திய தலைவர்களுடன் தாம்  விவாதித்ததாக அன்வார் மேலும் கூறினார்.

இதனிடையே, புதிதாக நியமிக்கப்பட்ட கம்போடிய பிரதமர் ஹான் மானெட்டுடன் தாம் சந்திப்பை நடத்தியதாகவும் உச்சநிலை மாநாட்டின் இடைவேளையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது இருதரப்பு மற்றும் பிராந்திய பொது நலன்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

சந்திப்பின் போது மானெட்டின் நியமனத்திற்கு  வாழ்த்து தெரிவித்துக் கொண்ட அன்வார், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க மேலும் பொருளாதார ஒத்துழைப்பை கண்டறியவும் ஒப்புக் கொண்டார்.


Pengarang :