ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் அரசியல் செயலாளர், நிறுவன உரிமையாளர் கைது

கோலாலம்பூர், செப் 24-  லஞ்சம் பெற்றச் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம் ஏ.சி.சி.) நேற்று  முன்தினம் கைது செய்யப்பட்ட இரு நபர்களில் முன்னாள் மூத்த அமைச்சரின்  அரசியல் செயலாளரும் ஒருவராவார்.

அமைச்சு ஒன்றுக்கு மொத்தம் 80 கோடி வெள்ளி மதிப்புள்ள புத்தகங்களை அச்சிடும் குத்தகையை நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் வழங்கியதற்கு பிரதியுபகாரமாக  இந்த லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ள முதல் சந்தேக நபர் 20 வயதுக்கு  மேற்பட்ட   முன்னாள் அரசியல் செயலாளர் என்றும்  இரண்டாவது சந்தேக நபர் 50 வயதிற்குட்பட்ட நிறுவன உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஒப்புதல்  அளிப்பதற்கு பிரதியுபகாரமாக இரண்டாவது சந்தேக நபரின் நிறுவனம் மூலம் குத்தகையாளரிடமிருந்து லஞ்சம் பெறுவதில் முன்னாள் மூத்த அமைச்சருடன் அவர்கள் கூட்டாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப் படுகிறது என்று அந்த வட்டாரம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 அவ்விருவரும் நேற்று முன்தினம்  வாக்குமூலம் அளித்த பின்னர் இரவு 11.00 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வரும்  செப்டம்பர் 26ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில்,  இச்சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதை உறுதிப் படுத்திய எம்.ஏ.சி.சி.துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமட் குஸைரி யஹாயா, 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(a)(B) பிரிவின்  கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :