ECONOMYNATIONALPENDIDIKAN

வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் கல்வியமைச்சு

நிபோங் திபால், செப் 24- நாட்டில் மழைப் பருவம் நெருங்கும் நிலையில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதற்கு கல்வியமைச்சு தயாராகி வருகிறது.

வெள்ளம் உள்பட  பேரிடர் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் (நட்மா) தாங்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு வருவதோடு அவர்களுடன் ஒத்துழைப்பையும் நல்கி வருவதாக கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

நாங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறோம். ஒருங்கிணைப்புக் குழுவும் இது குறித்து விவாதித்து வருவதோடு வெள்ள கண்காணிப்பு மையமும் பருவமழையை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது என்று இங்குள் சுங்கை ஆச்சே தேசியப் பள்ளியில் பல்பரிமாண மையத்தைத் திறந்து வைத்தப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களாகச் செயல்படவிருக்கும் பள்ளிகள் உள்பட வெள்ள தயார் நிலைக்கான செயல்முறையை அமைச்சு இறுதி செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் 299 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்தனர்.

இதனிடையே, மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் போது ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டிகளை அமைச்சு வெளியிட்டுள்ளதாக நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

வழிகாட்டிகள் நடைமுறையில் உள்ளன. அந்த வழிகாட்டிகளை அனைத்துத் தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :