ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

வெள்ள அபாயம்- நீர் சேகரிப்பு குளங்கள் முறையாக செயல்படுவதை சிப்பாங் நகராண்மைக் கழகம் உறுதி செய்யும்

சிப்பாங், செப் 28- பருவமழை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட வெள்ள நீர் சேகரிப்பு குளங்கள் முறையாகச் செயல்படுவதை சிப்பாங் நகராண்மைக் கழகம் உறுதி செய்யும்.

மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக ஸ்குவாட் பந்தாஸ் எனப்படும் உடனடி நடவடிக்கை குழுவின் 26 உறுப்பினர்கள் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அப்துல் ஹமிட்  ஹூசேன் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசான வெள்ளத்தின் அடிப்படையில் இம்மாவட்டத்தில் ஐந்து பகுதிகள் வெள்ள அபாயம் உள்ளவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

தேவையின் அடிப்படையில் உதவிப் பணிகளை மேற்கொள்வதற்காக அமலாக்கத் தரப்பினர் மற்றும் இதரப் பணியாளர்களை  களத்தில் இறக்குவதற்கு தாங்கள் தயாராக உள்ள வேளையில் மீட்புப் பணிகளுக்காக மூன்று படகுகள் மற்றும் வாகனங்களையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்  சொன்னார்.

வெள்ளம் ஏற்படும் பகுதிகளாக சுங்கை பீலேக் 2, பூச்சோங் பூலாவ் மெராந்தி பகுதி, தாமான் டெங்கில் ஜெயா, கம்போங் செமாராங், லாபு லஞ்சோட் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், கால்வாய்கள் குப்பைகளால் அடைபடாமல் இருப்பதை உறுதி செய்வதில் தாங்கள் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின ஒத்துழைப்பை நாடியுள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்


Pengarang :