ECONOMYMEDIA STATEMENT

சிப்பாங்கில் டிங்கி பாதிப்பு குறைந்தது- துப்புரவு இயக்கங்களை மேற்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சிப்பாங், செப் 28- சிப்பாங் மாவட்டத்தில் 38 வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 51 ஆகக் குறைந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 59 ஆக இருந்தது.

இம்மாதம் 17 முதல் 23 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 13.6 விழுக்காடு குறைந்துள்ளதாக சிப்பாங் நகராண்மைக் கழக தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.

கடந்த 26வது நோய் தொற்று வாரத்தில் 36 டிங்கி சம்பவங்களும் 37 வது வாரத்தில் 59 சம்பவங்கள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 51 ஆக வீழ்ச்சி கண்டது என்றார் அவர்.

இந்த நோய்த் தொற்று வாரத்தில் புதிய நோய்த் தொற்றுப் பகுதிகள் அடையாளம் காணப்படவில்லை என்று சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

டிங்கி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் இடங்களில் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்காக கூட்டு துப்புரவு இயக்கங்களை பல்வேறு இடங்களில் நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டிங்கி சம்பவங்களைப் குறைப்பதற்கும் சுகாதாரத் துறையினால் அபராதம் விதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் ஏதுவாக துப்புரவு இயக்கங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :