ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநகரில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிராகச் சோதனை- 15,000 குற்றப்பதிவுகள் வெளியீடு

கோலாலம்பூர், செப் 28- கோலாலம்பூர் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி நேற்று வரை மேற்கொண்ட மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 14,780 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

அவற்றில் 11,365 குற்றப்பதிவுகள் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லாதது, சாலை வரி காலாவதியானது, காப்புறுதி பாதுகாப்பு இல்லாதது போன்ற குற்றங்களை உட்படுத்தியிருந்ததாக கோலாலம்பூர்  ஜே.பி.ஜே. இயக்குநர்  முகமது ஜாக்கி இஸ்மாயில் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது 68,257 மோட்டார் சைக்கிள்கள் சோதனையிடப்பட்டன. அவற்றில் 575 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நடவடிக்கைகள் யாவும் 1986ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மோட்டார் சைக்கிளோட்டிகள் மத்தியில் சாலையில் வாகனங்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் அவசியத்தையும் சட்டத்தை முறையாக கடைபிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் நோக்கிலான இந்த சிறப்பு நடவடிக்கை பல்வேறு அமலாக்கத் துறைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள செந்துல் பாசார் டோல் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியா மடாணி கோட்பாட்டிற்குகேற்ப அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்த விருக்கிறோம். வாகனமோட்டிகள் சாலையை  பாதுகாப்பாகவும் விவேகமுடனும் பயன்படுத்துவதை உறுதி செய்வதும், அலட்சியம் காரணமான விபத்துகளை தவிற்பதை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர். 


Pengarang :