ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கெடாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,220ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர், செப் 28- நாட்டின் இரு வடமாநிலங்கள் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன. கெடாவில் வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பெர்லிஸ் மாநிலத்தில் புதிதாக ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தொடங்கி பெய்த அடை மழை காரணமாக கம்போங் குவாங் காஜாவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவிலுள்ள குபாங் காஜா இடைநிலைப்பள்ளியில் தற்காலிக துயர் துடைப்பு மையம் நேற்றிரவு 8.00 மணியளவில் திறக்கப்பட்டது.

அந்த கிராமத்திலுள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் அந்த நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பெர்லிஸ் மாநில பொது தற்காப்பு படையின் இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் முகமது இஷாய்மி முகமது டாவுட் கூறினார்.

இதனிடையே, ஆராவ் வட்டாரத்தில் வெள்ளம் முழுமையாக வடிந்ததைத் தொடர்ந்து கம்போங் தித்தி பீசி மற்றும் கம்போங் கெபுன் பகுதிகளைச்  சேர்ந்த 11 குடும்பங்களை உள்ளடக்கிய 38 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து ஆராவ் தேசிய பள்ளியில்  செயல்பட்டு வந்த துயர் துடைப்பு மையம் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் மூடப்பட்டது.

கெடா மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 372 குடும்பங்களைச் சேர்ந்த 1,220 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு 201 குடும்பங்களைச் சேர்ந்த 701 பேர் மட்டுமே இம்மையங்களில் தங்கியிருந்தனர்.

பாதிக்ப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்காக குபாங் பாசு கோத்தா ஸ்டார், பெக்கோ செனா மற்றும் பாலிங் ஆகிய மாவட்டங்களில் 11 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவின் செயலகத் தலைவர் மேஜர் முகமது சுஹாய்மி முகமது ஜைன் கூறினார்


Pengarang :