SELANGOR

சிலாங்கூர் தொழில்திறன் மேம்பாட்டு மையத்திற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வருகை

கோல சிலாங்கூர், செப் 29- சிலாங்கூர் மாநில அரசின் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும்
வீ.பாப்பாராய்டு இங்குள்ள சிலாங்கூர் மாநில தொழில்திறன் மேம்பாட்டு
மையத்திற்கு (எஸ்.டி.டி.சி.) கடந்த புதன் கிழமை பணிநிமித்த வருகை
மேற்கொண்டார்.

அந்த மையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்ட பாப்பாராய்டுவுக்கு
இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து அந்த மையத்தின் அதிகாரிகள்
விளக்கமளித்தனர்.

இத்தகைய தொழில் திறன் பயிற்சிகளில் குறைந்த வருமானம் பெறும் பி40
தரப்பு இளையோர் அதிகளவில் பங்கு கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்
கொண்ட பாப்பாராய்டு, இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்தி வறுமையிலிருந்து மீள முடியும் எனக் கூறினார்.

இளையோர் மத்தியில் தொழில் திறன் ஆற்றலைப் பெருக்குவதில்
அளப்பரிய பங்கினை ஆற்றி வரும் இந்த பயிற்சி மையத்தின்
நடவடிக்கைளை அவர் பெரிதும் பாராட்டினார்.

இந்த மையத்தில் அதிக அளவிலான இந்திய மாணவர்கள் சேர்ந்து
பயில்வதை உறுதி செய்வதில் வட்டாரத் தலைவர்கள் குறிப்பாக இந்திய
சமூகத் தலைவர்கள் முக்கிய பங்கினை ஆற்ற வேண்டும் என அவர்
கேட்டுக் கொண்டார்.

தற்போது இந்த பயிற்சி மையத்தில் சுமார் 50 இந்திய மாணவர்கள்
பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
முன்பு இன்பென்ஸ் இண்டநேஷனல் காலேஜ் என அழைக்கப்பட்ட
இம்மையத்தில் கார், மோட்டார் சைக்கிள், மின்னியல், மின்சாரம்,
குளிர்சாதன பழுது பார்ப்பு முக ஒப்பனை, சமையல், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறைகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலக அதிகாரிகளோடு
பெர்மாத்தாங் தொகுதி இந்திய சமூகத தலைவர் கே.பத்மநாபன், ஈஜோக்
சமூகத் தலைவர் என்.செல்வராஜ், சுங்கை பூரோங் சமூகத் தலைவர்
என்.முனியாண்டி, ஜெராம் சமூகத் தலைவர் கே.கே.மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :