ECONOMYSELANGOR

மத்திய கிழக்கு நாடுகளில் ஏஹ்சான் தயாரிப்பு பொருள்கள்- பி.கே.பி.எஸ். தகவல்

ஷா ஆலம், அக் 28- ஏஹ்சான் முத்திரை கொண்ட  தயாரிப்பு பொருள்கள் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் ஊடுருவும் என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கூறியது.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் எகிப்து நாட்டைச் சேர்ந்த உணவு உற்பத்தி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளதாக பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

உலர் உணவுப் பொருள்கள், பழங்கள் போன்ற உணவு வகைகள் சம்பந்தப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி சந்தையைத் திறப்பதற்கும் எகிப்துடன் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த ஒத்துழைப்பு வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடக்கக் கட்டமாக நாங்கள் அன்னாசி, பழாப்பழம் போன்றவற்றை அந்நாட்டிற்கு அனுப்பவுள்ளோம். வாரத்திற்கு ஐந்து முதல் ஆறு டன் வரையிலான உணவுப் பொருள்களை அந்நாட்டிற்கு அனுப்ப நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக இதன் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பி.கே.பி.எஸ். சார்பில் முகமது கைரிலும் கிரீனரி ஃபோர் அக்ரிசல்சர் மேனுபெக்சரிங் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் எல்சயாட் முகமது அப்டில்கவாட் எல்நகரும் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு மாநில அரசு தலைமைச் செயலகத்தில் விவசாயத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் மற்றும் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


Pengarang :