ECONOMYMEDIA STATEMENT

வெ. 3.37 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- எழுவர் கைது

காஜாங், அக் 28- சுமார் 3 கோடியே 37 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தில் தொடர்புடையவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் இலங்கையர் உட்பட ஏழு பேர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இருபத்தொன்று முதல் 52 வயது வரையிலான  அந்த சந்தேக நபர்கள் அனைவரும் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் வட்டாரத்தில் அன்றைய தினம் மதியம் 12.30 மணி முதல் 2.15 மணி வரை மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில்  கைது செய்யப்பட்டதாக  புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது  கமாருடின் முகமது டின் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து கோலக் கிள்ளான் துறைமுகம்  வழியாக கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றை  இங்குள்ள தாமான் செராஸ் பிரிமாவில் உள்ள ஒரு கிடங்கில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் சோதனையிட்ட போலீசார் அதில் 411,172 கிலோகிராம்  ஷாபு மற்றும் 100,813 கிலோ கொக்கேய்ன் போதைப் பொருளைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

அந்த போதைப் பொருளின் ஒரு பகுதி வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில்  மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறிய அவர்,  இக்கும்பல்  இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து  போதைப் பொருள் கடத்தலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது என்றார்.

கைதான ஏழு சந்தேக நபர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் தொடர்பான முந்தைய  குற்றப் பதிவுகளை கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் சந்தேக நபர்கள் அனைவரும் நேற்று முதல் ஏழு நாட்களுக்கு  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில்  1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின்   கீழ்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :