ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மழைகாலத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களைத் தயார் செய்யும்  பணியில் எம்.பி.ஐ. தீவிரம்

உலு லங்காட், நவ 5-   மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்வதற்குத்  தேவையான அத்தியாவசியத் பொருட்களை தயார் செய்யும் பணியில் எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தூய்மைப் பொருள்கள், உணவு வகைகள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட பேரிடர் நிவாரணத் தேவைகள் எம்.பி.ஐ. சேமிப்பு கிடங்கில் தயார் செய்யப்பட்டுள்ளதாக  அதன் நிறுவனக் கடப்பாடு மற்றும் வர்த்தகத் தகவல் தொடர்புத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இம்முறை வெள்ள தயார் நிலை ஏற்பாடுகள் தேசிய பேரிடர் நிறுவனம் (நட்மா) மற்றும் சமூக நலத்துறை (ஜே.கே.எம்.) போன்ற மாநில மற்றும் மத்திய பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின்  ஆதரவுடன் மேற்கொள்ளப் படுகின்றன என்று அவர் சொன்னார்.

எம்.பி.யிடமிருந்து ஏதேனும் கூடுதல் உதவி தேவைப்பட்டால் நாங்கள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறோம்  என்று குறிப்பிட்டார்.

நேற்று செமினியில் உள்ள கம்போங் பத்து தீகா கிராம சமூக மேலாண்மை மன்றத்தின் நடவடிக்கை அறையில் நடைபெற்ற நிகழ்வில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

சிலாங்கூரில் பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எம்.பி.ஐ. 700,000 வெள்ளியை செலவிட்டுள்ளதாக அஸ்ரி மேலும் கூறினார்.

பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 2023 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்து லட்சம் வெள்ளியில் இந்தத் தொகை ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

பேரிடர் நிவாரணம் தவிர்த்து, கல்வித் துறைக்கு கணிசமான நிதியை எம்.பி.ஐ. ஒதுக்கியுள்ளது. இலவச கல்வி, சமூக நிகழ்ச்சிகள், மசூதிகள் மற்றும் சுராவு (பிரார்த்தனை அறைகள்), ஹாஜ் யாத்ரீகர்களுக்கான உதவித்தொகை, மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உணவு கூடை நன்கொடைகள் ஆகியவற்றையும்  எம்.பி.ஐ. வழங்குகிறது.


Pengarang :