ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு –  இரு ஆப்பிரிக்கர்கள் கைது

கோலாலம்பூர், நவ 5- கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் குடி நுழைவுத்  துறையினர் நடத்திய சிறப்பு சோதனை  நடவடிக்கைகளில் இரு ஆப்பிரிக்க பிரஜைகள் கைது செய்யப்பட்டதன் மூலம் போலி ஆவணத் தயாரிப்பு கும்பல் முறியடிக்கப்பட்டது.

கடந்த  இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் மூலம் இக் கும்பலின் மூளையாக செயல்பட்ட   46 வயது நைஜீரியர் காஜாங்கில் கைது செய்யப்பட்ட வேளையில் கானாவைச்  சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் ஜாலான் கஸ்தூரியில் தடுத்து வைக்கப்பட்டார் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

புத்ராஜெயா குடிநுழைவுத்துறை  தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவினர் இங்குள்ள ஜாலான் சான் சாவ் லினில்  உள்ள சந்தேக நபரின் வீட்டில் நடத்திய சோதனையில் போலியானவை என சந்தேகிக்கப்படும் 10 நைஜீரிய கடப்பிதழ்கள்  ஒரு போலி மாணவர் அடையாள கடவுச்சீட்டு  கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

மாணவரின்  கடவுச்சீட்டை தாம் கானா நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பெற்றதாக சந்தேக நபர் கூறியுள்ளார்.  இதையடுத்து, ஜாலான் கஸ்தூரியில் ஒரு  கானா பிரஜையை சிறப்பு நடவடிக்கைப் பிரிவினர்  கண்டறிந்து தடுத்து வைத்தனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள   பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஏழு போலி அடையாள அட்டைகள் மற்றும்   ஐக்கிய நாடுகள் சபையின்  அகதிகளுக்கான உயர் ஆணையத்தின்  அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார் அவர்.

1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம், 1966 ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம் மற்றும் 1963ஆம் ஆண்டு  குடிநுழைவு  விதிமுறைகளின் கீழ் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அந்த  இரண்டு சந்தேக நபர்களும் மேல் விசாரணைக்காக புத்ராஜெயா குடிநுழைவு தடுப்பு முகாமில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.


Pengarang :