ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் ஐந்து ஆண்டுகளில் 8,800 கோடி வெள்ளி முதலீடு- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், நவ 16- உற்பத்தி சார்ந்த 1,500 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 8,800 வெள்ளி மதிப்பிலான முதலீட்டை சிலாங்கூர் அரசு பதிவு செய்துள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டங்கள் மூலம் 95,610 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

கடந்த 2018 முதல் 2023 வரை உற்பத்தி துறை சார்ந்த 1,506 திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் முதலீட்டு மதிப்பு 8 ஆயிரத்து 888 கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 902 வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று கடந்த 2018 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான மாநிலத்தின் முதலீடு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து புக்கிட் லஞ்சான் உறுப்பினர் புவா பெய் லிங் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு சொன்னார்.

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களை வரைந்து வருவதாகக் கூறிய இங், முதலாவது சிலாங்கூர் திட்டம்  போன்ற முக்கிய கொள்கைகளின் உருவாக்கமும் அதில் அடங்கும் என்றார்.

இது தவிர, தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த மேம்பாட்டு வட்டார உருவாக்கம், சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாடு மற்றும் சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் இந்நோக்கத்தின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு சிப்பாங்கிலுள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகில் சிலாங்கூர் அனைத்துலக வான் பூங்காவை அமைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று அவர் சொன்னார்.


Pengarang :