EXCO Sumber Manusia dan Pembasmian Kemiskinan Papparaidu Veraman menjawab soalan ketika sidang Dewan Negeri Selangor di Shah Alam pada 16 November 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தோட்டத் தொழிலாளர்கள் நலன் காக்கப்படுவதை மாநில அரசு தொடர்ந்து உறுதி செய்யும்- பாப்பாராய்டு உறுதி

ஷா ஆலம், நவ 16- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்கப்படுவதை மாநில அரசு தொடர்ந்து உறுதி செய்யும் என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு உறுதியளித்தார்.

சமூக நலன் சார்ந்த அரசாங்கம் என்ற முறையில் வசதி குறைந்த குடும்பங்கள் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின்  சமூக-பொருளாதார நிலை மீது மாநில அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள், முன்னாள் தோட்டத்  தொழிலாளர்கள் மற்றும்  அவர்களின் பிள்ளைகளை இலக்காகக் கொண்ட திட்டங்கள் சில மேம்பாடுகளுடன் பூர்வீகக் குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கான நிலைக்குழுவின் வாயிலான சேவைகள் இன்று வரை தொடர்கின்றன என்று அவர் சொன்னார்.

 மாநில சட்டமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டிக்ன வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்கள் யாவும் இந்திய சமூகத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இவ்வாண்டு 502  வசதி குறைந்த இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு மாநில அரசு கல்விக் கட்டண உதவியை வழங்கியுள்ளது. இந்நோக்கத்திற்காக 19 லட்சத்து 81 ஆயிரத்து 749 வெள்ளி செலவிடப்பட்டுள்ளது.

இது தவிர, 10 லட்சத்து 78 ஆயிரத்து 200 வெள்ளி ஒதுக்கீட்டில் 3,594 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டது என்று பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்பு தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆட்சிக்குழு மாநிலத்திலுள்ள பல்வேறு தோட்டங்களுக்கு வருகை புரிந்ததையும் பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.

மாநில அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் தொழிலாளர் சட்ட அமலாக்கத்திற்கேற்ப தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நலனில் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :