ECONOMYMEDIA STATEMENTNATIONAL

காஸா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,500ஆக உயர்வு

காஸா சிட்டி, நவ. 16: காஸா பகுதியில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,500 பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில்  4,710 சிறார்கள் மற்றும் 3,160 பெண்களும் அடங்குவர் என்று காஸாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் நேற்று தெரிவித்தது.

மருத்துவப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 200ஆக உயர்ந்துள்ளது என்று ஊடக அலுவலகத்தை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 22 பொது பாதுகாப்பு படை உறுப்பினர்களும்  51 ஊடகவியலாளர்களும் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின்  எண்ணிக்கை 29,800ஜ எட்டியுள்ளது அவர்களில் 70 விழுக்காட்டினர்  சிறார்கள் மற்றும் பெண்களாவர் என்று அது குறிப்பிட்டது.

மொத்தம் 95 அரசு கட்டிடங்கள், 255 பள்ளிகள் மற்றும் 74 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன. மூன்று தேவாலயங்கள் உட்பட 162 வளாகங்கள் சேதமடைந்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவம் 52 சுகாதார மையங்கள் மீதும் குறி வைத்து தாக்கியது. இதில் 55 ஆம்புலன்ஸ்களை சேதமடைந்த  அதே நேரத்தில் 25 மருத்துவமனைகள் செயல்படவில்லை.

அல்-ஷிஃபா மருத்துவ வளாகத்தில்  நோயாளிகள், வீடுகளை இழந்து அடைக்கலம் நாடியவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதோடு அவர்களின் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவ வளாகம் பல நாட்களாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த நிலையில் இஸ்ரேலியப் படைகள் புதன்கிழமை அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தன.


Pengarang :