ECONOMYMEDIA STATEMENTNATIONAL

புக்கிட் லஞ்சாங்  தொகுதி   தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு.

செய்தி ; சு.சுப்பை

பெட்டாலிங் ஜெயா. நவ.19- டமன்சாரா நாடாளுமன்ற தொகுதி  மற்றும் புக்கிட் லஞ்சாங்  சட்ட மன்ற  தொகுதிகளின்  இணைந்த  தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. சுமார்  500க்கும் அதிகமான பல்லின மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் மற்றும் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் சார்பில் செனட்டர் சுரேஷ் சிங்  ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இரவு 8.00 மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்  செனட்டர் சுரேஸ் சிங் வருகை தந்தனர். ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் புக்கிட் லஞ்சாங் சட்டமன்ற இந்திய சமுதாயத் தலைவர் லோகநாதன், பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழக உறுப்பினர் டெனி, புக்கிட் லஞ்சாங்  தொகுதி அதிகாரி சிவலிங்கம் மற்றும் பலர் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் மற்றும் சுரேஷ் சிங் இருவரும் குத்து விளக்கு ஏற்றி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.  அதனை தொடர்ந்து  விருந்து உபசரிப்பு தொடங்கியது. கலந்துக் கொண்ட பொதுமக்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. தோசை மற்றும் இந்திய பலகாரங்கள் பரிமாறப்பட்டது.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பல்லின மக்கள் கலந்து கொண்டதை புவா வெகுவாக பாராட்டினார்.

பல்லின மக்கள் கலந்து கொண்ட  விருந்து, சிலாங்கூர் மாநிலம் ஒற்றுமையுடன் வழி நடத்தப் படுகிறது  என்பதற்கான  ஆதாரம். மாநில மக்களும் ஒற்றுமையாக வாழ்வது பாராட்டுக்குரியது என்று சட்டமன்ற உறுப்பினர் பாராட்டினார்.

தீபாவளி என்பது இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டு வருவது. அப்படி என்றால் கெட்டதை நீக்கி நல்லதை கொண்டு வருவது என்ற பொருள் கொண்டது. சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்ற பிறகு நடைபெறும் முதல் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழா என்பதில்  மகிழ்ச்சி  அடைகிறேன்  என  தெரிவித்தார் மாண்புமிகு  புவா.

இதனை தொடர்ந்து இப்படி பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இப்படி பட்ட நிகழ்ச்சியின் வழி பல்லின மக்களிடையே ஒற்றுமையை வளர்க்க முடியும்.  இத்தொகுதியில் உள்ள இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காணப் படும். பல ஆலயங்களுக்கு சென்று இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறோம் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட செனட்டர் சுரேஷ் சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் டாமன்சாரா டாமாய் அரசு சார்பற்ற இயக்கத்திற்கு ரி.ம. 5,000.00 மானியமாக வழங்கப் பட்டது.

20 சிறப்பு அதிர்ஷ்ட குழுக்கு பரிசுகள் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி சிறப்பு சேர்க்கப் பட்டது.


Pengarang :