ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெந்திங் செம்பா சுரங்கப் பாதையில் நிலச் சரிவா?  போலீஸ் மறுப்பு

கோலாலம்பூர், நவ 27- சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வரும் சுரங்கப் பாதையில் நிலச் சரிவு ஏற்பட்டதை சித்தரிக்கும் காணொளி கெந்திங் செம்பா சுரங்கப்பாதையின் நுழைவாயிலில்  ஏற்பட்டதல்ல என போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நேற்றிரவு முதல் இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் இந்த நிலச்சரிவு சம்பவம் நாட்டிற்கு வெளியே நடந்ததாக நம்பப்படுவதாகவும் பெந்தோங் மாவட்ட  காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சய்ஹாம் முகமது கஹார் தெரிவித்தார்.

அந்த காணொளிப் பதிவில் இடம்பெற்றுள்ளச் சம்பவம் கெந்திங் செம்பாவில் நிகழ்ந்ததல்ல. அக்காணொளியை  நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்று அவர் சொன்னார்.

கெந்திங் செம்பா சுரங்கப்பாதையின் வாகனங்கள் நுழையும் மற்றும்  வெளியேறும்  இடங்களில் மாட்சிமை தங்கிய பேரரசரின் (அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா) படம் இருப்பது தெளிவாகத் தெரியும் என பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

கெந்திங் செம்பாவில் இச்சம்பவம் நிகழ்ந்திருந்தால்   காவல்துறை அல்லது நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் உடனடியாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக,  ஒரு  சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் சாலை  இடிந்து விழுவதைச் சித்தரிக்கும் 50 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.


Pengarang :